ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடம் உள்ளது. நாளை தேவரின் 112ஆவது பிறந்தநாள் மட்டும் 57ஆவது குருபூஜை அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. குருபூஜை நடைபெறுவதை ஒட்டி அங்கு மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.
தேவர் ஜெயந்தி விழா, குருபூஜைக்காக எட்டாயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேவர் நினைவிடம் வரும் வழியில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு முக்கியப் பகுதிகள் கண்காணிக்கப்பட்டுவருகின்றன. பொதுமக்களுக்கு இடையூறாகச் செயல்படுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் வெளியிட்ட அறிக்கையில், "தேவர் பூஜைக்காக உள்ளூர் வாசிகள், வெளி மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்களுக்கு தனித்தனி வழி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வழியைத்தான் பயன்படுத்த வேண்டும், வேறு பாதையில் வந்தால் அனுமதிக்கப்படாது. பசும்பொன்னில் முதலுதவி, தீயணைப்பு, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை: எஸ்.பி. நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!