ராமநாதபுரம்: ராமேஸ்வரம் தீவு பகுதிகளில் உள்ள சுமார் 80ஆயிரம் மக்கள், சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் ராமேஸ்வரத்தில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள மக்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக 19 மருத்துவர்கள் பணியில் அமர்த்தப்படவேண்டும். ஆனால், 13 மருத்துவர் மட்டுமே பணியில் அமர்த்தப்பட்டிருந்த நிலையில், கரோனா நோய்த்தொற்று காரணமாக பணியில் இருந்த 9 மருத்துவர்களை மாற்றுப் பணிக்கு மாவட்டத்தின் மற்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால், தற்பொழுது ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால், மகப்பேறு மற்றும் பொது மருத்துவப் பிரிவுகளுக்கு மருத்துவர் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மேலும் மருத்துவமனையில் உள்ள எக்ஸ்ரே மையம், ரத்தப் பரிசோதனை மையங்களில் பணிபுரிய ஊழியர்கள் இல்லாததால் தொடர்ந்து அவை மூடப்பட்டுள்ளன.
இதுகுறித்து திமுகவினர் கடந்த வாரம் மருத்துவமனையில் உள்ள தலைமை மருத்துவரிடமும், நகராட்சி ஆணையரிடம் புகார் அளித்த நிலையில், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இன்று அவர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால், அப்பகுதி சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.
இதையும் படிங்க: சவூதி அரேபியாவில் கொத்தடிமையாகக் கணவர் : மீட்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனைவி மனு!