ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் பலத்த சூறைக்காற்று கடந்த சில நாட்களாக வீசி வருகிறது. இதன் காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது. கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் மீன்வளத் துறை அறிவித்திருந்தது.
இந்நிலையில், நேற்று ராமேஸ்வரம் துறைமுக பகுதியில் கடல் உள்வாங்கியதன் காரணமாக விசைப்படகுகள் தரை தட்டி நின்றன. மீனவர்கள் தங்களது படகை இழுத்துச் சென்று ஆழமான பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தினர்.
அதேபோல் தனுஷ்கோடி முதல் ராமேஸ்வரம் வரையிலான சாலை பகுதிகளில் சூறைக்காற்று காரணமாக சாலையின் மீது மணல் குவிந்துள்ளது. இதனால் பேருந்து சேவை கடுமையாக பாதித்ததோடு சுற்றுலாப் பயணிகளும் வாகனங்களை இயக்க கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.