ராமநாதபுரம் அருகே வாலாந்தரவைச் சேர்ந்த கார்த்தி, இவரது நண்பர் விக்கி ஆகியோர் ஒரு கொலை வழக்கு தொடர்பாக கேணிக்கரை காவல் நிலையத்தில் 2018ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி பிணை கையெழுத்து போட்டுவிட்டு டிஐஜி அலுவலகம் பகுதியில் வந்தபோது பெட்ரோல் குண்டு வீசி இருவரும் படுகொலைசெய்யப்பட்டனர்.
இக்கொலையின் 2ஆம் ஆண்டு நினைவு தினம் நாளை வருவதையொட்டி பழிக்குப் பழி வாங்க வாலாந்தரவையில் வெடிகுண்டு பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில், ராமநாதபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் வெள்ளைத்துரை தலைமையில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு காவல் துறையினர் மோப்ப நாய் துணையுடன் வாலாந்தரவைக்கு விரைந்தனர். தேடுதல் வேட்டையில் சுரேஷ் என்பவர் தோப்பிலிருந்து இரண்டு வெடிகுண்டுகளைக் கைப்பற்றினர்.
இது தொடர்பாக கார்த்தியின் அண்ணன் தர்மராஜ் (37), மற்றொரு தரப்பைச் சேர்ந்த பூமிநாதன் (42), வார்டு உறுப்பினர் சுரேஷ் (33) ஆகியோரிடம் கேணிக்கரை காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.
இதன்காரணமாக வாலாந்தரவை பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இக்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக்கோரி தர்மராஜ், உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் செப்டம்பர் 28ஆம் தேதி மனு தாக்கல்செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.