ராமநாதபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரத் துறை சார்பாக குழந்தைகளுக்கான குடல்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், சுகாதாரத்துறை துணை இயக்குநர் செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குழந்தைகளுக்கு மாத்திரை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், “ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 19 வயதுக்குட்பட்ட மூன்று லட்சத்து 49 ஆயிரத்து 576 குழந்தைகளுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வழங்கப்பட்டுள்ளன.
ராமநாதபுரத்தில் கரோனா தொற்று பரவும் வேகம் குறைந்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக இதுவரை ஐந்தாயிரத்து 171 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் நான்காயிரத்து 824 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 244 பேர் மட்டுமே சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் வீட்டிலிருந்தே சிகிச்சைப் பெறும் முறையையும் ஊக்குவித்து வருகிறது. தற்போது, 244 பேர் 159 வீடுகளிலிருந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் இவர்களுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.
இதனை முறையாக பின்பற்றி தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த வேண்டும். மேலும் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும்” என்றும் கூறினார்.