ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 72 வயது முதியவர் ஒருவர், கரோனா சோதனை முடிவுகள் வருவதற்கு முன்பே உயிரிழந்தார். அவர், கடந்த 12ஆம் தேதி சளி, காய்ச்சல் இருப்பதாக அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். கரோனா அறிகுறிகள் இருப்பதாக அவரை மருத்துவர்கள் கரோனா சிறப்பு வார்டில் அனுமதித்து அவரின் ரத்த மாதிரிகளை சோதனைக்கு அனுப்பினர்.
இந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 14) மாலை திடீரென அவர் மரணமடைந்தார். பரிசோதனை முடிவுகள் வந்தால்தான் அவர் கரோனா தொற்றால் உயிரிழந்தாரா அல்லது வேறு நோயால் உயிரிழந்தாரா என்பது தெரியவரும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கரோனா வார்டில் இருந்தவர் திடீரென உயிரிழந்த சம்பவம் மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தெற்கு தெருவைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவருக்கு நேற்று கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவருக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஓட்டுநரிடம் இருந்து பரவியது தற்போது தெரியவந்துள்ளது. அதேபோல், பரமக்குடி ராஜ வீதியைச் சேர்ந்த 55 வயது பெண் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவரின் கணவர் சமய மாநாட்டில் பங்கேற்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து அந்தப் பகுதிகள் கண்காணிப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனால் ராமநாதபுரத்தில கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 5 பேர் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ள நிலையில் இவர்கள் இருவரும் அங்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'நிபந்தனைகளுடன் மீன்பிடிக்கச் செல்லலாம்' - தமிழ்நாடு அரசு