ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பகுதியில் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ள கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் இன்று ஆய்வு செய்தார்.
அப்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க பொதுமக்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 1,233 நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 14 நபர்களுக்கு கரோனா தொற்று உள்ளது. 1,125 நபர்களுக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 94 நபர்களுக்கான பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளன.
வெளிநாடுகளில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு திரும்பிய 4,777 நபர்கள் அனைவரும் 28 நாள்கள் தனிமைப்படுத்தும் காலம் நிறைவடைந்து கரோனா தொற்று அறிகுறி இல்லாமல் நலமுடன் உள்ளனர். மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளைச் சுற்றி சுமார் 5 கி.மீ. சுற்றுவட்டாரத்தில் மொத்தம் 11 கட்டுப்பாட்டு பகுதிகள் ஏற்படுத்தப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் 750 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு, ஒவ்வொரு வீடாக பொதுமக்களுக்கு நோய் அறிகுறி குறித்து தொடர்ந்து 14 நாட்களுக்கு கள ஆய்வுப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தென்காசியில் நாளை முழு ஊரடங்கு - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு