ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் வழிபாடு நடத்தவும், தனுஷ்கோடி, அரிச்சல்முனை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடவும் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்கள் வருகைபுரிவர். இச்சுற்றுலாப் பயணிகளை நம்பி பல்வேறு தொழிலாளர்கள் பணம் ஈட்டிவந்தனர். ஆனால், இந்தாண்டு கரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால், தொழில்கள் முடங்கிய தொழிலாளர்கள் தங்களது வாழ்வை இழந்தனர். மார்ச் மாதத்திலிருந்து சுமார் 50 லட்சம் பேருக்கும் மேல் பார்வையிட்டுச் சென்றிருக்கவேண்டிய தனுஷ்கோடி, அரிச்சல்முனை சுற்றுலாத் தலங்கள் தற்போது ஆள் அரவமற்று வெறுமையாக காட்சியளிக்கிறது.
சுற்றுலாப் பயணிகளுக்கு சிற்பி, உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் தொழிலில் 300க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வந்தனர். ஆனால், இந்த ஊரடங்கு அவர்களின் வாழ்வை புரட்டிப்போட்டுள்ளது. தற்போது, தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. சுற்றுலாத் தலங்களுக்கு தகுந்த பாதுகாப்புடன் மக்கள் சென்றுவர அரசு அனுமதியளித்துள்ளது. ஆனால், தனுஷ்கோடிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தற்போது வரை தடை நீடிக்கிறது. மேலும், தனுஷ்கோடி செல்லும் பாதையில் சோதனைச்சாவடி அமைத்து சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை காவல் துறையினர் தடுத்து திருப்பி அனுப்புகின்றனர்.
இதுகுறித்து பேசிய மீனவர் உமையான், "நாங்கள் மீன்பிடித்தொழிலை பிரதானமாக கொண்டு தனுஷ்கோடி பகுதியில் வாழ்ந்து வருகிறோம். இந்த கரோனா ஊரடங்கால் பேருந்து போக்குவரத்து இல்லாததால் மீன் ஏற்றுமதி செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. அதிக வாடகை கொடுத்து மீன்களை கொண்டு செல்லவேண்டிய நிலையில் இருந்து வருகிறோம். சுற்றுலாப்பயணிகள் இல்லாத காரணத்தாலும் வருவாய் இன்றி தவித்து வருகிறோம். தினசரி ஆயிரம் ரூபாய் வரை வருவாய் ஈட்டிவந்த நாங்கள் தற்போது உணவுக்கே திண்டாடும் நிலை இருக்கிறது" என்றார்.
"தனுஷ்கோடி மக்கள் மீன்பிடித்தொழில் மற்றும் சுற்றுலாப்பயணிகளை நம்பியே வாழ்வாதாரம் நடத்தி வந்தனர். ஆனால், இந்த ஊரடங்கு மக்களைப் பெரிதாகப் பாதித்துள்ளது. இரண்டும் இல்லாததால் இதை நம்பியிருந்த பெண்களும், மீனவர்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். எனவே, அரசு கவனம் எடுத்து தனுஷ்கோடி மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில் சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்புடன் அனுமதிக்கவேண்டும்" என்கிறார், தனுஷ்கோடியைச் சேர்ந்த மாரி.
அரசு அலுவலர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, ''தனுஷ்கோடி பகுதியில் தற்போது காற்று அதிவேகமாக வீசுவதால் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை. மேலும், கரோனா பரவல் கட்டுக்குள் வந்தபின் தனுஷ்கோடி பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் மீண்டும் அனுமதிக்கப்படுவர். தற்போது, அரிச்சல் முனைப் பகுதியில் சிதலமடைந்த சாலைகளை சரி செய்யும் பணி நடைபெற்று வருவதால் அதுமுடிந்த பிறகு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர்" என்றனர்.
கடலையும், சுற்றுலாப் பயணிகளையும் நம்பி வாழ்க்கை நடத்திவரும் தங்களின் வாழ்வாதாரம் காக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்பதே தனுஷ்கோடி மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
இதையும் படிங்க: வாகன விற்பனையில் புரட்சியை ஏற்படுத்த உள்ள இ-பைக்