தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குட்பட்ட மறு சீரமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளின் இறுதி பட்டியல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான வீர ராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வீர ராகவ ராவ் கூறியதாவது, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்பேரில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கான மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
2019 நாடாளுமன்ற பொதுத் தேர்தலின்போது மேற்குறிப்பிட்டுள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் ஆயிரத்து 369 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 500ஐ தாண்டுதல், 2 அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிகளுக்கிடையிலான மறுசீரமைப்பு, வாக்குச்சாவடி மையம் அமைந்துள்ள கட்டடத்தின் நிலை போன்ற பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டு இந்த மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பரமக்குடி தொகுதிக்குட்பட்ட நான்கு வாக்குச்சாவடிகள், திருவாடானை தொகுதிக்குட்பட்ட 15 வாக்குச்சாவடிகள், முதுகுளத்தூர் தொகுதிக்குட்பட்ட ஒரு வாக்குச்சாவடி என 20 வாக்குச்சாவடி மையங்களின் பெயர் மாற்றப்படவுள்ளன. மறுசீரமைப்பு தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் தங்களது கருத்துக்கள், ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு பெறப்படும் கருத்துக்கள் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு இந்திய தேர்தல் ஆணைய வழிகாட்டு நெறிமுறைகள்படி இறுதி வாக்குச்சாவடி பட்டியல் தயார் செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.