கரோனாவின் இரண்டாவது அலை, நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் தமிழ்நாடு அரசின் சார்பில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, இன்று(ஏப்.26) பரமக்குடி பேருந்து நிலையத்தில் தீயணைப்பு வாகனத்தின் மூலமாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
இதனை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஸ் ஆலிவர் பொன்ராஜ் மேற்பார்வையிட்டார். தொடர்ந்து பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அம்மா உணவகத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
இதையடுத்து, பொன்னையாபுரத்தில் அமைந்துள்ள அழகப்பா உறுப்பு கல்லூரியில் கரோனா நோயாளிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள படுக்கை வசதிகளை பார்வையிட்டார். அதன் ஏற்பாடுகளை துரிதப்படுத்துமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்பு கரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று வரை(ஏப்.25) கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 190 ஆகும். குறிப்பாக, பரமக்குடியில் கரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போது 82 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.