ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள வலையனேந்தல் கிராமத்தில் வேளாண்மைத் துறை, பாபா அணு ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்போடு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய புதிய ரக டிடி சி எம்-1 டுப்ராஜ் என்றழைக்கப்படும் நெல்லின் அறுவடை இன்று நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியார் வீர ராகவ ராவ் தொடங்கி வைத்தார்.
இதில் பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தின் மூத்த விஞ்ஞானி டேனியல் செல்லப்பா, வேளாண்மை துணை இயக்குநர் சேக் அப்துல்லா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கூறுகையில், ”விவசாயகளின் மகசூலை அதிகரிக்கவும், அவர்களின் வருவாயை உயர்த்தவும் வேளாண் துறையின் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் 1.25 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதற்கு சராசரி மழையளவு 827 மி.மீ. அளவாகக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாகச் சராசரியை விட குறைந்த மழையளவே பதிவாகியுள்ளது. 2018-2019ஆம் ஆண்டில் 914 மி.மீ. மழையளவு பதிவாகியுள்ளது.
மழை பொய்த்துப்போகும் காலங்களில் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய புதிய நெல் ரகங்களை அறிமுகப்படுத்தி விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அதனடிப்படையில், பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் மூலம் பருவநிலை மாற்றத்திற்கேற்ப வறட்சியைத் தாங்கி, குறைந்த நீரில் அதிக மகசூல் தரும் வகையில் டி டி சி எம்-1 டுப்ராஜ் என்ற நெல் ரகம் கண்டறியப்பட்டுள்ளது. திருப்புல்லாணி அருகே உள்ள வலையனேந்தல் கிராமத்தில் உள்ள துரைராஜ் என்ற விவசாயி நிலத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5 கிலோ நெல் விதை பயிரிடப்பட்டது.
பயிரிடப்பட்ட நெல் விதைகள் சிறப்பான முறையில் நெற்கதிர்களாக வளர்ச்சியடைந்தது. இதையடுத்து அறுவடை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 350 கிலோ அளவில் நெல் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சீறிய மாடு - பதறிய மக்கள்- சாலையில் பதற்றம்!