ஆடி அமாவாசை தினத்தன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புனித தலங்களான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், சேதுக்கரை, தேவிப்பட்டினம் நவபாஷன ஆகிய இடங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருவது வழக்கம் .குறிப்பாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு அதிக பக்தர்கள் வருவார்கள். அதை கருத்தில் கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதை மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் நேரில் ஆய்வு செய்தார். பின் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது "ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு இந்த ஆண்டு 2 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனடிப்படையில், 75 வெளியூர் பேருந்துகள், 36 நகரப் பேருந்துகள் என 111 சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளை பொறுத்தவரை தீயணைப்பு படை , மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்படும். அதேபோல் கிட்டத்தட்ட 1000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சுற்றுச்சூழலை பாதுகாக்க நகராட்சி மூலம் 40 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. புரோகிதம் செய்ய அதிக கட்டணம் வசூல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். தீவுப் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க கல்வி அலுவலரிடம் அறிவுறுத்தினார்.