ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று (மே. 7) அரசு முதன்மை செயலாளரும் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான தர்மேந்திர பிரதாப் யாதவ், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
கரோனா சிகிச்சைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள படுக்கைகள், மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படும் திரவ ஆக்சிஜன் இருப்பு குறித்து நேரில் ஆய்வு செய்தார்கள்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது, " மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது ஆயிரத்து 287 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் . இதுவரை மொத்தம் 73 ஆயிரத்து 236 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 600 படுக்கைகளும், பரமக்குடி அரசு மருத்துவமனையில் 200, முதுகுளத்தூர், கமுதி, கீழக்கரை உள்ளிட்ட மருத்துவமனைகளில் 200, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 500 என மொத்தம் ஆயித்து 500 படுக்கைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தற்பொழுது ராமநாதபுரம் அரசு மருத்துவ மருத்துவக் கல்லூரியில் 1000 படுக்கை வசதிகளாக மேம்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . இவற்றில் 800 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகளுடன் ஏற்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் 11 ஆயிரம் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்சிஜன் சேமிப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு சராசரியாக 1800 லி முதல் 2200 லி அளவு திரவ ஆக்சிஜன் பயன்படுத்தப்படுகிறது.
கரோனா தொற்று உறுதி செய்யப்படுவோருக்கு சிகிச்சைக்காக போதிய அளவு ஆக்கிஜன், படுக்கைகள், உயிர் காக்கும் மருந்துகள் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்கள் ஒத்துழைப்பின் மூலம் மட்டுமே கரோனா தொற்றை தடுக்க முடியும்.
பொது இடங்களுக்குச் செல்லும் போது அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிதல், தகுந்த இடைவெளியை பின்பற்றுதல் , கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் போன்ற நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்" எனக் கூறினார்.
தொடர்ந்து, கேணிக்கரையில் உள்ள தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக மருந்து சேமிப்பு கிடங்கிற்கு அரசு முதன்மை செயலாளர், ஆட்சியர் சென்று இருப்பு வைக்கப்பட்டுள்ள மருந்து பொருட்கள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்கள். ஆய்வின் போது , மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அல்லி , உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.