ராமநாதபுரம்: தமிழ்நாட்டில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முன்னதாக அறிவிக்கப்பட்டு கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகிய சமய வழிபாட்டுத் தலங்கள் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 30 அன்று கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள், ஒரே நேரத்தில் கூடி அக்னித் தீர்த்த கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். இது நோய்த்தொற்று இடருக்கு வித்திட்டதாகக் கூறப்படுகிறது.
அனுமதிக்குத் தடை
இதனைக் கருத்தில்கொண்டு, ஆவணி அமாவாசை நாளன்று, அக்னித் தீர்த்த கடற்கரைப் பகுதிகளில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்ய பொதுமக்கள் கூட வாய்ப்பு உள்ளது. இதனால் தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளது.
எனவே வருகின்ற செப்டம்பர் 6ஆம் தேதி திங்கள்கிழமை ஆவணி அமாவாசை என்பதனால், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் வழிபடவும், அக்னித் தீர்த்தக்கரையில் பக்தர்கள் புனித நீராடவும் அனுமதி இல்லை என அம்மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கரோனா மூன்றாம் அலை பரவலைத் தடுக்கும்பொருட்டு மக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: விலக்கு கேட்பதை விட்டு நீட் தேர்வு நடத்த அரசு ஒத்துழைக்க வேண்டும் - அண்ணாமலை