ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் பழனிசாமி பரமக்குடி சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட பார்த்திபனூர் பகுதியில் 11 ஏழை குடும்பங்களுக்கு கறவை மாடுகள் வழங்கினார். பின்னர் விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அதன் பின்னர் அவர் பேசியதாவது:
தமிழ்நாடு அரசு விவசாயத்திற்கு முன்னுரிமை அளித்து வருகிறது. நான், நீர் மேலாண்மையை முக்கியமாக கவனித்து வருகிறேன். எல்லா ஏரி, குளம், கால்வாய்கள் தூர்வாரப்பட்டு விவசாயிகளுக்கு கோடைகாலத்தில் தேவையான நீரை தற்போதே தேக்கி வைத்திருக்கிறோம்.
14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி குண்டாறு இணைப்பிற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவ கல்லுரி, கால்நடை ஆராய்ச்சி கால்நடை பூங்கா அமைக்கப்படும். அதில் எதிர்ப்பு சக்தி தரும் கலப்பின பசுக்கள் வளர்க்கப்படும். நிச்சயம் அந்த பூங்கா ஆசியாவில் மிகபெரிய கால்நடை பூங்காவாக அமையும்.
கலப்பின ஆடுகளான 50 கிலோ வரை வளரும் ஆடுகளை விவசாயிகளுக்கு தரவுள்ளோம். ஆண் அல்லது பெண் கன்றுகள் எவை தேவையோ அதை தேர்வு செய்யலாம். காய், கனிகள் அதிகமாக விளையும் மாவட்டங்களில் அதை பாதுகாப்பாக வைக்கும் குளிரூட்டப்பட்ட அறை அமைக்கப்படும்.
அதிகப்படியான காய், கனிகள் உற்பத்தி ஆகும்போது இந்த அறையில் வைத்து விட்டு தேவைப்படும் போது எடுத்துக்கொள்ளலாம். தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண ஆந்திரா, தெலங்கானா முதலமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். இதைத்தொடர்ந்து பரமகுடியில் நெசவாளர்களுடன் கலந்துரையாடினார்.
இதையும் படிங்க:தொலைக்காட்சிகளில் வரும் செய்தி தவறு - முன்னாள் திமுக எம்பி மஸ்தான்