ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பாம்புவிழுந்தான் கிராமத்தில் கடந்த மாதம் 30ஆம் தேதியன்று சரவணன் என்ற ஆசிரியர், கிராம மக்களுடன் இணைந்து முதுமக்கள் தாழி, சுட்ட மண் உறைகிணறுகளைக் கண்டெடுத்தார்.
மேலும் கலையூர் அம்மன் கோயில் ஊரணியில் கடந்த மாதம் 10ஆம் தேதி முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. இது குறித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் உப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் என்பவர், பழங்கால நாகரிகம் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என வழக்குத் தொடுத்திருந்தார்.
அதனையடுத்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, மத்திய, மாநில தொல்லியல் துறையினர் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நேற்று மாலை பரமக்குடி அருகேயுள்ள கலையூர், பாம்புவிழுந்தான், போகலூரில் சென்னை மத்திய தொல்லியல் துறை துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் நாயர், திருச்சியைச் சேர்ந்த ஆய்வாளர் யாதிஸ்குமார், உதவியாளர் ஆரோக்கியநாத் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது, பாம்புவிழுந்தான் ராக்கப்பெருமாள் கோயில் திடலில் ஆய்வு மேற்கொண்டபோது அங்கிருந்த செங்கற்கள், உறைகிணறுகளின் துண்டுகள், பானை ஓடுகளை சேகரித்தும் பழங்கால நாணயம் ஒன்றையும் கண்டெடுத்தும் ஆய்விற்காக கொண்டுசென்றனர்.