ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரின் மகன் பிரதீப் (27). இவருக்கு நடிகைகள், அழகான பெண்களை வசப்படுத்தி அவர்களுடன் நெருங்கிப் பழகும் ஆசை இருந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன் வலைப்பக்கம் ஒன்றில் பிரபல நடிகைகளின் கவர்ச்சிப் படங்கள் தோன்றி, அதில் ஒருவரைத் தேர்ந்தெடுத்தால் அந்நடிகையை சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நடிகைகளுடன் நெருங்கிப் பழக வேண்டும் என்று தீராத ஆசையால் அந்த விளம்பரத்தினுள் சென்று பதிவு செய்தார் பிரதீப். பின் அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து பிரதீப்பை தொடர்புகொண்ட ஒருவர் காஜல் அகர்வாலை சந்திக்க ரூ. 50 ஆயிரம் பதிவு கட்டணத்தைக் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார். பிரதீப்பும் அதன்படியே செலுத்தியுள்ளார்.
பிரதீப்பை தொடர்ந்து ஏமாற்ற முடிவுசெய்த கும்பல் மேலும் ஆசை வார்த்தைகளைக் கூறி ரூ. 60 லட்சம் வரை கறந்துள்ளனர். தான் ஏமாற்றப்படுவதை தமாதமாகவே உணர்ந்த பிரதீப் அவமானத்தால் வீட்டைவிட்டு வெளியேறினார்.
பின்னர் தொழிலதிபர் அளித்த புகாரின் அடிப்படையில் கொல்கத்தாவிலிருந்த பிரதீப்பை காவல் துறையினர் மீட்டனர். மேலும் வங்கிக் கணக்கைக் கொண்டு விசாரணை மேற்கொள்கையில் சென்னையைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் சரவணகுமார்தான் இந்த மோசடிக்கு பின்னணியில் இருந்தது தெரியவந்தது.
அவரை கைது செய்த காவல் துறையினர் அவரிடமிருந்து, ரூ.3 லட்சம் பணத்தை மட்டுமே பறிமுதல் செய்தனர். இது குறித்து மேலும் இரண்டு பேரை தேடும் பணியில் ஈடுபட்டுவருவதாக ராமநாதபுர மாவட்ட கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா தெரிவித்தார்.