ராமநாதபுரம்: சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி இன்று (அக்.12) காலை தனியார் சொகுசு ஆம்னி பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்து பாம்பன் பாலத்தில் முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றது. அப்போது, எதிரே வந்தகொண்டிருந்த அரசுப் பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து பாம்பன் பாலத்தின் அருகே உள்ள நடை மேடை மீது ஏறி பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி கடலில் விழும் சூழ்நிலை ஏற்பட்டது. இதை சுதாரித்துக் கொண்ட ஆம்னி பேருந்து ஓட்டுநர் பேருந்தை இலாவகமாக நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்தில் ஆம்னி பேருந்து ஓட்டுநர் படுகாயமடைந்து பேருந்துக்குள் மாட்டிக்கொண்டார். உடனடியாக பாம்பன் மீனவர்கள் கயிறு கட்டி நீண்ட நேரம் போராடி ஓட்டுநரை மீட்டனர். அதோடு 7 பயணிகள் படுகாயமடைந்தனர். அவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தால் பாம்பன் பாலத்தில் போக்குவரத்து பாதிக்கபட்டது.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நண்பனின் நினைவு நாளில் கெத்து காட்ட பொதுமக்களை கத்தியால் வெட்டி வன்முறையில் ஈடுபட்ட ரவுடிகள்