வங்கக்கடலில் உருவாகியுள்ள யாஷ் புயல், நாளை (மே.26) மேற்கு வங்கம் - ஒடிசா இடையே கரையைக் கடக்கவுள்ள நிலையில், இன்று (மே.25) ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் தீவுப்பகுதி, பாம்பன் தீவுப்பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
மேலும், பாம்பன், ராமநாதபுரம் நகர்ப் பகுதி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 50 முதல் 65 கிலோ மீட்டர் வேகம் வரை சூறைக் காற்று வீசி வருகிறது.
இதன் காரணமாக, பாம்பன், ராமேஸ்வரம், தனுஷ்கோடி துறைமுகப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்துள்ளன.
அதேபோல், பல்வேறு இடங்களில் மரங்கள் சாயக்கூடிய சூழ்நிலை உள்ளதால், அவற்றைக் கண்காணிக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அடுத்த இரண்டு நாள்களுக்குக் காற்றின் வேகம் அதிக அளவில் இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.