முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல்கலாமின் 88ஆவது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்நிலையில், ராமேஸ்வரம் பேக்கரும்பில் அமைந்துள்ள அப்துல்கலாமின் நினைவிடத்தில் அவரது குடும்பத்தினர், கலாமின் மூத்த சகோதரர் முத்து மீரா மரைக்காயர் தலைமையில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
![apj-abdulkalam-family-request-the-government-to-make-science-centre](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-rmd-1-abdul-kalam-88th-birthday-family-request-the-government-visual-script-7204441_15102019105929_1510f_1571117369_73.jpg)
மேலும், இது குறித்து ஏபிஜே அப்துல்கலாமின் அண்ணன் மகள் நசீமா மரைக்காயர் கூறுகையில், ”அப்துல்கலாம் பெயரில் அறிவியல் மையம் அமைத்து தருவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதற்கான நடவடிக்கை தற்போதுவரை எடுக்கப்படவில்லை. மாநில அரசு ஆறு அறிவியல் மையம் அமைக்கத் தேவையான நிலத்தை கையகப்படுத்தி வைத்துள்ளது. ஆனால் அதற்கான பணிகள் தொடங்காமல்தான் உள்ளன.
![apj-abdulkalam-family-request-the-government-to-make-science-centre](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-rmd-1-abdul-kalam-88th-birthday-family-request-the-government-visual-script-7204441_15102019105929_1510f_1571117369_774.jpg)
ராமேஸ்வரம் பேக்கரும்பில் உள்ள நினைவு மண்டபத்தை 65 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பார்வையிட்டுள்ளனர். அறிவியல் மையம் அமையும்பட்சத்தில் இங்குவரும் இளைஞர்கள் எளிதில் அறிவியல் மையத்தை காணமுடியும். அனைத்து மாணவர்களாலும் இஸ்ரோ, ஸ்ரீஹரிகோட்டாவிற்குச் சென்று அதை காண இயலாது என்பதால் மத்திய, மாநில அரசுகள் தாமதிக்காமல் பேக்கரும்பில் அறிவியல் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
அதேபோல், லீட் இந்தியா பவுண்டேஷன் தொண்டு நிறுவனத்தின் தலைவர் ஹரிஹெப்பனபல்லி நேரில் வந்து அப்துல் கலாமின் நினைவிடத்தில் குடும்பத்துடன் சேர்ந்து அஞ்சலி செலுத்திவிட்டு, அவரின் அண்ணன் முத்து மீரா மரைக்காயரிடம் சாந்தி ஸ்ரீ குளோபல் சார்பாக அமைதிக்கான விருதை வழங்கினார்.
இதையும் படிங்க:
தேசிய பேரிடர் தினம் - தீத்தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு!