ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதியைச் சேர்ந்த ஒருவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமாரின் பிரத்யேக எண்ணிற்குத் தொடர்புகொண்டுள்ளார். தொடர்பு கொண்ட அந்நபர், தனது மனைவியை ஒருவர் ஆபாசமாக சித்தரித்து, ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பி விடுவதாக மிரட்டி வருவதாகவும், பதிவேற்றம் செய்யாமல் இருக்க ரூ.20 ஆயிரம் கேட்டு மிரட்டுவதாகவும், இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
இதனையடுத்து இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு காவல் துறையின் உதவியுடன், தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியைத் தேடிவந்தனர். இந்நிலையில் இதனை செய்து வந்தது, பரமக்குடி அருகேயுள்ள உலகநாதபுரத்தைச் சேர்ந்த ரோகித் என்பது தெரியவந்தது. அவரைக் கைது செய்த தனிப்படை காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ரோகித் கோவையிலுள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவதும், தனது போலி ஃபேஸ்புக் கணக்கில் இது போன்ற சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
மேலும், அவரது செல்போனை ஆய்வு செய்ததில், பல பெண்களின் ஆபாச காணொலிகள் இருப்பதையும் காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர். இதையடுத்து பரமக்குடி காவல் துறையினர், ரோகித்தின் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், இது போன்ற இணையவழி குற்றங்களைத் தெரிவிக்க ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் பிரத்யேக எண்ணிற்கு (9489919722) தெரிவிக்கலாம் என்றும், அப்படி தெரிவிப்பவர்களின் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: அதிமுக பேரூர் கழக பொருளாளர் கட்சியிலிருந்து நீக்கம்