தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலானது ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளதால், அதற்கான ஏற்பாடுகளை மாவட்டங்களில் உள்ள தேர்தல் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இன்று (மார்ச் 02) அனைத்து கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக, அதிமுக, தேமுதிக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், மக்கள் நீதி மையம், தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்றோர், தாங்கள் சந்திக்கும் பிரச்னைகளை மாவட்ட தேர்தல் அலுவலரிடம் எடுத்துக் கூறினர்.
குறிப்பாக பணப் பட்டுவாடாவை தடுப்பதற்கு அந்தந்த பகுதிகளுக்கு அலுவலர்கள் நியமித்து, அவர்களுடைய எண்ணை தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். இது குறித்து உறுதியான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, அனைத்து வகையான குறைபாடுகளும் நிவர்த்தி செய்யப்பட்டு, நேர்மையான தேர்தல் நடப்பதற்கு அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று தேர்தல் அலுவலர் உறுதியளித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் சிவகாமி உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: பதற்றமான 243 வாக்குச்சாவடிகளுக்கும் கூடுதல் கவனம் செலுத்தப்படும்: மாவட்ட ஆட்சியர்