ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 42 சட்டம் ஒழுங்கு காவல் நிலைய சரகங்களில் 425 தாய் கிராமங்களும், ஆயிரத்து 427 குக்கிராமங்களும் உள்ளன. அக்கிராமங்களில் காவல் துறையின் சேவையைப் பொதுமக்களுக்கு கொண்டுசேர்க்கும்விதமாகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையிலும், முக்கியத் தகவல்களைச் சேகரிக்கவும் கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்களாக 383 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவ்வாறு கிராம விழிப்புணர்வு காவல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளவர் தனக்கு ஒதுக்கப்பட்ட கிராமத்தில் உள்ள அனைத்துப் பிரிவினருடன் தொடர்புகொண்டு, கிராமங்களின் முக்கியஸ்தர்களான பஞ்சாயத்துத் தலைவர், கிராம நிர்வாக அலுவலர், தலையாரி, அரசு ஊழியர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் போன்ற அந்தப் பகுதியின் அனைத்துச் சமூகங்களைச் சேர்ந்தவர்களைக் கொண்டு குறைந்தது 100 நபர்களைக் கொண்ட வாட்ஸ்அப் குழுவை உருவாக்கித் தகவல்களைச் சேகரிப்பார்கள்.
கடந்த 10 முதல் 15 ஆண்டு காலங்களில் சம்பந்தப்பட்ட கிராமங்களில் நடந்த முக்கியமான சம்பவங்கள், சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளைக் கவனத்தில்கொண்டு, பிரச்சினைக்குரிய பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி தகவல்களைச் சேகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரகசிய தகவல்களை அளிக்குமாறும், அவ்வாறு தகவல் அளிப்போர் குறித்த விவரங்கள் ரகசியம் காக்கப்படும் எனவும், காவல் துறையின் மேற்கண்ட சேவையைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட நெடுந்தொலைவு மின்சார ரயில்