ராமநாதபுரம்: கமுதி அருகே கார்-பைக் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அபிராமத்தை சேர்ந்தவர் ராமநாதன் (49). இவர் பத்திர எழுத்தராக பணியாற்றி வந்தார். நேற்று (ஜனவரி 7) அபிராமத்தில் இருந்து பார்த்திபனூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.அப்போது பார்த்திபனூர் பகுதியிலிருந்து கமுதி நோக்கி கார் ஒன்று வந்துள்ளது.
அபிராமம் பகுதியையொட்டிய குடமுருட்டி ஐயப்ப சுவாமி கோயில் அருகே எதிர்பாராதவிதமாக இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், பைக்கை ஓட்டி வந்த ராமநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் மோதிய வேகத்தில் பைக் தீப்பிடித்து எரிந்துள்ளது. காரும் தலைகுப்புற கவிழ்ந்து விட்டது.
![தீப்பிடித்து எரிந்த பைக்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-rmd-05-road-accident-one-dead-on-the-spot-pic-script-tn10040_07012021185000_0701f_1610025600_886.jpg)
இதில் காரை ஓட்டி வந்தவர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து அபிராமம் காவல் நிலையத்தில் ராமநாதனின் அண்ணன் நாகேஸ்வரன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.