ராமநாதபுரம்: கமுதி அருகேவுள்ள நத்தம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (40). இவர் அப்பகுதியில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் சமையல் செய்து வருகிறார். இவருடன் சமையல் தொழிலில் உதவியாளராக அதே பகுதியைச் சேர்ந்த குமரன் (35) என்பவர் பணியாற்றி வருகிறார்.
இருவரும் திருமண நிகழ்ச்சி ஒன்றில் சமையல் வேலைக்குச் சென்றுவிட்டு சம்பளம் வாங்கிக் கொண்டு வந்துள்ளார்கள். பின்னர் நத்தம் பேருந்து நிறுத்தம் அருகே சம்பளத்தை பிரிக்கும்போது ஏற்பட்ட தகராறில், இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
தொழிலாளி கைது
இதில், ஆத்திரமடைந்த குமரன், முருகனை கல்லால் தாக்கினார். இதில் முருகன் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் முருகனை மீட்டு சிகிச்சைக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து முருகனின் மனைவி குருவம்மாள், அபிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், குமரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: குடும்பத் தகராறு: கணவரின் கண்முன்னே பெண் தூக்கிட்டுத் தற்கொலை