ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேட்டுப் பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் காவல் துறையினர் குடும்பத்தினருக்கான கரோனா தடுப்பூசி முகாமை ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் தொடங்கிவைத்தார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ராமநாதபுரத்தில் உள்ள 95 விழுக்காடு காவல் துறையினருககு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
ஐந்து விழுக்காடு காவல் துறையினர் இணை நோயின் காரணமாகத் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். அவர்களும் மருத்துவரின் ஆலோசனை பெற்றுத் தடுப்பூசி போட்டுக்கொள்வார்கள்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட காவலர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டாலும் உயிரிழப்பு என்ற அளவிற்கு செல்லவில்லை. அவர்கள் விரைவில் குணமடைந்து வருகின்றனர்.
காவல் துறையினர் மட்டுமல்லாது அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது" எனக் கூறினார்.
அதனைத் தொடர்ந்து கமுதி பகுதியில் கரோனாவால் ஏழ்மையில் வாடும் 50 குடும்பத்தினருக்கு 5 கிலோ அரிசியும், 200 ரூபாய் மதிப்புள்ள காய்கறியும் காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்.