ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூர் அருகே உள்ள வெள்ளப்பட்டிக் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி கிருஷ்ணவேணி, சாயல்குடி அருகே கன்னிராஜபுரம் தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களது மகன் அஸ்வத்(8), சாயல்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்தான்.
அஸ்வத் காலை 7.35 மணியளவில் வீட்டின் அருகே உள்ள குப்பைத் தொட்டியில் குப்பையைக் கொட்ட கிழக்கு கடற்கரைச் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது தூத்துக்குடியிலிருந்து சாயல்குடி நோக்கி வந்த டிப்பர் லாரி சிறுவன் அஸ்வத் மீது எதிர்பாராவிதமாக மோதியதில், சிறுவன் தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
இதனையடுத்து ஆத்திரமடைந்த வெள்ளப்பட்டி கிராம மக்கள் மாணவரின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரி, கிழக்கு கடற்கரைச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும் குப்பைத் தொட்டியை சாலையை கடக்காதவாறு வீடுகளின் அருகிலேயே வைக்கவும், வேகத்தடை அமைக்கவும் ஏற்கனவே கோரிக்கை விடுத்தும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் கூறினர்.
இறந்த சிறுவனின் உடலை சாலையிலிருந்து காவல் துறையினர் எடுக்கவிடாமல் மாலை நான்கு மணி வரை கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து கடலாடி வட்டாட்சியர் முத்துக்குமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேஷியஸ் உள்ளிட்ட அலுவலர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின் மாலை 4 மணிக்கு மறியல் வாபஸ் பெறப்பட்டது. சாயல்குடி காவல் துறையினர் லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.