ராமேஸ்வரம் கடல் வழியாக இந்தியாவுக்குள் தங்கம் கடத்திவரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், மத்திய புலனாய்வு பிரிவு காவல் துறையினரும், மண்டபம் இந்திய கடலோர காவல் படையினருடன் இணைந்து நேற்று நள்ளிரவு கடலுக்குள் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, மணாலி தீவு அருகே சந்தேகத்திற்கிடமாக வந்த படகை கண்டறிந்தனர்.
படகை நிறுத்தி சோதனை செய்ததில், தங்கம் கடத்தப்படுவது உறுதியானது. சுமார் 9.7 கிலோ தங்கம் இருந்ததாக கணக்கிட்டுள்ளனர். கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள மரைக்காயர்பட்டினத்தை சேர்ந்த முஹமது ராசிக், பைஸ் அஹமது, முஹமது பரூக், ஜெயினுல் பயாஸ் கான், ஜசிம் அஹமது ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
இந்த தங்கத்தின் மதிப்பு ஐந்து கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.