ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அய்யனார்கோயில் தெருவைச் சேர்ந்தவர் லெட்சுமி. இவர் நான்கு பசுக்களைப் பராமரித்து வளர்த்துவந்தார். இதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்திவந்துள்ளார்.
நேற்று முதுகுளத்தூர் கண்மாய் பகுதியில் வழக்கம்போல் நான்கு பசுக்களையும் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற லெட்சுமி நிழலுக்காக மரத்தடியில் ஒதுங்கியுள்ளார்.
அப்போது கண்மாய்ப் பகுதியில் தண்ணீர் கிடந்த இடத்தில் உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து கிடந்துள்ளது. அதனை அறியாமல் சென்ற நான்கு பசுக்களும் மின்கம்பியில் மிதித்ததால், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
இதையடுத்து லெட்சுமி முதுகுளத்தூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். காவல் துறையினர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, மின்வாரிய அலுவலர்கள், கால்நடை மருத்துவருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர் கால்நடை மருத்துவர் மேற்கொண்ட உடற்கூராய்விற்குப்பின் பசுக்கள் அங்கேயே புதைக்கப்பட்டன.
இது குறித்து லெட்சுமி கூறும்போது, "எனது கணவர் இறந்துவிட்டதால், நான்கு பசுக்களை வளர்த்து அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்பம் நடத்திவந்தேன். தற்போது மின்சாரம் தாக்கி நான்கு பசுக்களும் இறந்துவிட்டன.
கண்மாய் போன்ற நீர்நிலைப் பகுதிகளில் மின்கம்பிகளை முறையாகப் பராமரிக்காத மின்வாரியத்தின் அலட்சியப்போக்கால், சுமார் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான நான்கு பசுக்கள் இறந்துவிட்டன. எனவே உயிரிழந்த பசுக்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்- பி.ஆர்.பாண்டியன்