ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் தற்போது வரை சுமார் 3,185 பேர் கரானா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் தங்கி சிகிச்சைப் பெற்று வந்தவர்கள், இன்று (மே 22) ஒரே நாளில் 25 பேர் பலியாகியுள்ளனர்.
இவர்களில், கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்த சம்பவம் ராமநாதபுரம் பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நோய்த் தொற்று அதிகரித்து வருவதைத் தடுப்பதற்கும், படுக்கைகள், ஆக்ஸிஜனுடன் கூடிய படுக்கைகள் குறித்து அறியவும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த கட்டளை மையமும் போர்க்கால அடிப்படையில் இயங்கும் கட்டுப்பாட்டு அறையும் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இந்த மையத்தினை 7708711334, 7708292732, 04567-230060 ஆகிய எண்களிலும், 1077 என்ற கட்டணமில்லா தொடர்பு எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் . இவை தவிர மாநில அளவிலான கட்டளை மையத்தை 104 என்ற கட்டணமில்லா தொடர்பு எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.