ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே உள்ள பாண்டுகுடி ஆரம்பச் சுகாதார நிலையத்தில் செவிலியர் ஒருவர் குழந்தையுடன் தங்கி பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், செப்டம்பர் 12ஆம் தேதி இரவு அரசூர் கிராமத்தைச் சேர்ந்த காளியம்மாள் என்பவரின் மகன் பிரசாத், மருத்துவ உதவி கேட்பது போல் சுகாதார நிலையத்திற்குள் நுழைந்து செவிலியரிட்ம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான செவிலியர் தற்போது ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பெண் செவிலியருக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த பிரசாத் இதுவரை கைது செய்யப்படவில்லை. இதனைக் கண்டித்து உடனடியாக அவரை கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்க செவிலியர்கள் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவிடம் மனு அளித்தனர்.
இதில், கிராமப்புற செவிலியருக்கு ஏற்பட்ட நிலை தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராம சுகாதார நிலையங்களில் பணிபுரியும் செவிலியர்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பணிபுரியும் இடத்தில் உரிய பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்து தரவேண்டும் என்றும் துணை சுகாதார நிலையங்களில் மின்சாரம், தண்ணீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் செவிலியர்களிடம் உறுதியளித்தார்.