ராமநாதபுரம்: தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகின்ற நிலையில், அதனைக் கட்டுப்படுத்துவதற்காக தளர்வுகளற்ற, தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் பயனாக தற்போது தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் தொற்று வெகுவாகக் குறைந்துவருகிறது.
குறிப்பாக ராமநாதபுரத்தில் நாள்தோறும் 450 என்ற எண்ணிக்கையில் கரோனா தொற்று இருந்துவந்த நிலையில் தற்போது 100 முதல் 130 எண்ணிக்கையாகக் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கரோனா தொற்றால் முதியவர்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுவந்த நிலையில், சமீபகாலமாக கர்ப்பிணிகளும் சிறுவர்களும் பாதிக்கப்படுவது அதிகரித்துவருகிறது.
அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதத்தில் சுமார் 150 கர்ப்பிணிகள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவந்த சுமார் 60 கர்ப்பிணிகளுக்கு குழந்தை பிறந்துள்ளது. இவர்களில் 30 பேருக்கு சுகப்பிரசவம் மூலம் குழந்தை பிறந்துள்ளது.
மீதம் உள்ளவர்கள் தொடர் பிரசவ சிகிச்சையில் இருந்துவருகின்றனர். தொற்றால் பாதிக்கப்பட்ட 150 கர்ப்பிணிகளும் நோய்த்தொற்றிலிருந்து உரிய சிகிச்சை மூலம் குணமாகிவருகின்றனர்.
இந்நிலையில் ராமநாதபுரத்தை மற்ற மாவட்டங்களோடு ஒப்பிடும்போது பிரசவம் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.
இதற்கு முறையான சிகிச்சை, முன்கால-பின்கால பராமரிப்பு சிகிச்சை போன்ற காரணங்களால் அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிகள் அதிக அளவில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுவருகின்றனர்.
இந்தத் தகவலை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி தலைவர் மருத்துவர் மலர்வண்ணன் தெரிவித்தார்.
இதையும் படிங்க:இனி 8 போட வேண்டாம்!