ராமநாதபுரம்: பரமக்குடி அருகே வாதவனேரி கிராமத்தில் 75 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்தக் கிராமத்தில் ஆண்டுதோறும் மாரியம்மன் கோயிலுக்கு முளைப்பாரி உற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த முறை 15 குடும்பங்களை காரணம் ஏதும் கூறாமல் ஒதுக்கி வைத்துவிட்டு மற்ற குடும்பத்தினர் முளைப்பாரி திருவிழாவை நடத்துவதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட 15 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த அக்.4 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) காமாட்சி கணேசனிடம் மனு அளித்துள்ளனர்.
மேலும் ராமநாதபுரம் காவல்துறை கண்காணிப்பாளர், பரமக்குடி கோட்டாட்சியர், நைனார் கோவில் காவல் துறையினரிடம் புகார் அளித்தும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஒதுக்கி வைக்கப்பட்ட 15 குடும்பத்தினர் வீடுகள் முன்பாக மற்ற குடும்பத்தினர் கும்மி அடித்தல், விசில் அடிப்பது, கூச்சலிடுவது உள்ளிட்டவற்றை செய்து அவமரியாதை செய்கின்றனர் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இன்று (அக்.8) 15 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் பேசி இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து திருவிழாவைக் கொண்டாட ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: அண்ணாமலை மீது வழக்குப்பதிவு