ராமநாதபுரத்தில் நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இன்று முதல் வரும் 15ஆம் தேதி வரை வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வாடகை வாகனங்கள் ராமநாதபுரத்திற்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 11ஆம் தேதி பரமக்குடியில் இமானுவேல் சேகரின் 62ஆவது குருபூஜை விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் மாவட்டம் முழுவதிலும் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் பயணிகள் தங்களது உடமைகளையும் நகைகளையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவது குறித்து ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
குறிப்பாக பெண் பயணிகள் பயணம் செய்யும் ரயில் பெட்டிகள் ரயில்வே பாதுகாப்புப் படையினரால் கண்காணிக்கப்பட்டுவருவதாகவும் ஏதேனும் திருட்டுச் சம்பவங்களோ அல்லது சந்தேகத்திற்குரிய நபரைக் கண்டால் உடனடியாக ரயில்வேயின் இலவச எண்ணான 182-ஐ அழைத்து தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து ராமநாதபுரம் ரயில்வே பாதுகாப்புப் படையின் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், வாடகை வாகனங்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளதால் பயணிகள் அதிகமானோர் மதுரை முதல் ராமேஸ்வரம் வரையிலான ரயில் வழித்தடத்தை பயன்படுத்துவதாகவும், குறிப்பாக பெண் பயணிகள் அதிகளவில் பயணம் செய்வதை கருத்தில் கொண்டு ரயில் நிலையம் வரும் பயணிகளுக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.