ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கரோனா சிகிச்சையளித்து வந்த மருத்துவர்கள், செவிலியரும் தொற்று பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இவர்களில் சிலர் குணமடைந்துள்ள நிலையில் பலர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.
இதனால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் அடிப்படையில் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் 50 மருத்துவர்கள், 60 செவிலியர் நியமிக்க அரசு உத்தரவிட்டது.
இது குறித்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனை முதல்வர் மலர்வண்ணன் கூறியதாவது,"தமிழ்நாடு அரசு தற்காலிகமாக மருத்துவர்கள், செவிலியர் நியமனம் செய்ய உத்தரவிட்டது. இதன்படி தற்போது 13 மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 3 பேரின் விண்ணப்பங்கள் பரிசீலணையில் உள்ளது.
செவிலியர் விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலணை செய்யப்பட்டு வருகிறது. இந்த பணி முடிவடைந்ததும் ஓரிரு நாளில் செவிலியர், மருத்துவர்கள் தங்களது பணிகளை செய்ய தொடங்கிவிடுவார்கள்.
இவர்களது பணி 3 மாத காலத்திற்கு தற்காலிகமானது. அரசின் வழிகாட்டுதல் படி ஒப்பந்தம் முடிவடைந்ததும் அதற்கேற்ப முடிவு செய்யப்படும்.
கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர் நியமனம் செய்யப்படுவதால் கரோனா சிகிச்சை மட்டுமின்றி அனைத்துப் பிரிவு சிகிச்சைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு உரிய சிகிச்சையளிக்கப்படும். தற்போது ராமநாதபரம் அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை பாதிப்பு யாருக்கும் இல்லை" எனத் தெரிவித்தார்.