ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள தரைக்குடி கிராமத்தில் தனியார் பட்டா இடத்தில் அனுமதியின்றி சிலர் மணல் அள்ளுவதாக காவல் துறை, வருவாய்த் துறை அலுவலர்களுக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு நடத்திய அதிரடி சோதனையில் முதலில் நான்கு லாரிகள், மணலுடன் பிடிபட்டன. இவை அனைத்தும் அபிராமம் காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, தரைக்குடி கிராமம் அருகே அனுமதியின்றி மணல் குவாரி இன்று தொடங்கப்பட்டு மொத்தம் 30 லாரிகள் மணலுடனும், இரண்டு பொக்லைன் இயந்திரங்களும் பிடிபட்டுள்ளன.
பின்னர், பரமக்குடி கோட்டாட்சியர் தங்கவேலு, கமுதி வட்டாட்சியர் செண்பகலதா சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தி அனைத்து லாரிகளையும் பறிமுதல்செய்து, அபிராமம் காவல் நிலையத்திற்கு கொண்டுசென்றனர்.
இதனைத்தொடர்ந்து, மணல் அள்ளிய லாரியின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.