ராமநாதபுரம் மாவட்டத்தில் தடுப்பூசி கையிருப்பு முடிந்ததால் கடந்த இரண்டு நாள்களாகத் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
மாவட்டத்தில் தற்பொழுதுவரை ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 446 பேர் கரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
மக்களிடையே தடுப்பூசி செலுத்துவதற்கான ஆர்வம் ஏற்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் என்றும் தேடி அலைகின்றனர். சென்ற வாரம் 4000 கோவிஷீல்டு, 500 கோவாக்சின் என 4,500 தடுப்பூசிகள் தமிழ்நாடு சுகாதாரத் துறையினரிடம் வந்த நிலையில் அது இரண்டு நாள்களில் காலியாகியது.
கடந்த இரு தினங்களாக தடுப்பூசி செலுத்தாத நிலையில் நேற்றிரவு 1,000 கோவாக்சின் தடுப்பூசிகள் ராமநாதபுரத்தை வந்தடைந்தன.
இன்று அவை ராமநாதபுரம் அரசு மருத்துவமனை, ராமநாதபுரம் ஆரம்ப சுகாதார நிலையம், திருப்புல்லாணி ஆரம்பச் சுகாதார நிலையம், தொண்டி, ஆர்.எஸ். மங்கலம், மண்டபம் போன்ற பகுதிகளுக்குப் பிரித்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது தவணையாகச் செலுத்துவோருக்கு கோவாக்சின் தடுப்பூசியில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.