மண்டபம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வீடுகளிலிருந்து சேகரிக்கப்படும் குப்பை, கழிவுகள் மண்டபம் முகாம், முனைக்காடு, வண்ணாந்தரவை ஆகிய பகுதிகளில் உள்ள குப்பை கிடங்குகளில் கொட்டப்படுகின்றன. இந்த குப்பை குவியலில் இரை தேடி பசுமாடுகள் சாப்பிடுவது வழக்கம். இந்நிலையில், நேற்று காலை இரை தேடிச் சென்ற பசு மாடுக்கள் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. பசுக்களின் உரிமையாளர்கள் தேடிச் சென்றபோது, குப்பை கிடங்குகளில் 10 பசுமாடுகள் இறந்து கிடந்தன. இதை பார்த்த உரிமையாளர்கள் கதறி அழுதனர்.
இந்த மாடுகள், முனைக்காடு பகுதியை சேர்ந்த பால்ராஜ், நாகலட்சுமி, முத்துச்சாமி, சண்முகவேல், பெரியகருப்பன், ராணி, பாகம்பிரியாள் ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் என்று தெரியவந்தது. பசு ஒன்றின் மதிப்பு ரூ.50 ஆயிரம் என்றும், குழந்தைபோல வளர்த்த மாடுகள் இறந்தது மிகுந்த வேதனை அளிப்பதாக உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பசு மாடுகள் இறந்த பகுதியில் பூச்சிக் கொல்லி மருந்தான குருணை மருந்து கிடந்துள்ளது. அதனை தவறுதலாக மாடுகள் சாப்பிட்டு இறந்துள்ளது என்று தெரியவந்தது.
பசுக்களை கொல்வதற்காக அடையாளம் தெரியாத நபர்கள் குருணை மருந்தை கொட்டி வைத்திருக்கக்கூடும் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த கால்நடைத் துறையினர் உடற்கூராய்வுக்காக பசுமாடுகளை எடுத்துச் சென்றனர். பத்துக்கும் மேற்பட்ட பசுமாடுகள் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.