கொத்தமங்கலம் அருகே கடந்த சில நாட்களாகவே சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்து வந்தனர். ஆனால், இதுகுறித்து காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று அப்பகுதியில் உள்ள பொதுக் குடிநீர் குழாய் அருகே சட்டவிரோதமாக சிலர் மது பாட்டில்களை விற்பனை செய்ததை ஜெகதீசன் என்கிற இளைஞரும், அவரது நண்பர்கள் பார்த்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, 'பொது இடத்தில் இப்படி மது விற்பனை செய்கிறீர்களே' என்று மது விற்பனையாளர்களிடம் ஜெகதீசனும் அவரது நண்பர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறி இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிராம மக்கள், மது விற்பனையாளர்களை சரிமாரியாக தாக்கினர். அவர்களிடமிருந்த மது பாட்டில்களை கீழே போட்டு உடைத்தனர். இதனால், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. பின்னர், மதுபாட்டில்கள் விற்பனையாளர்கள் முருகானந்தம், கண்ணன், குணசேகரன், ராஜா, ராமலிங்கம், மணிவாசகம், துரை ஆகியோரை காவல் நிலையத்தில் கிராம மக்கள் ஒப்படைத்தனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், "சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதால் சிறுவர்கள் கூட குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிறார்கள். இதனால் பல குடும்பங்களில் ஆண்கள் குடிகாரர்களாக மாறி, குடும்ப நிம்மதி கெடுகிறது. மதுவிற்பனை செய்பவர்களிடம் காவல் துறையினர் பணம் வாங்கிக் கொண்டு அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கின்றனர். இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும். கொத்தமங்கலத்தில் மட்டுமின்றி எந்த மாவட்டத்திலும் இதுபோன்ற சட்டவிரோத மது விற்பனை நடக்கக்கூடாது" என்றும் கோரிக்கை விடுத்தனர்.