புதுக்கோட்டை: பொன்னமராவதி அருகே வார்பட்டு கிராமத்தில் ஒவ்வொரு வருடமும் மகா சிவராத்திரியை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த வருடம் போலீசார் அனுமதி வழங்காத நிலையிலும் இன்று (பிப்.19) மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
இந்த மஞ்சுவிரட்டில் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட காளைகள் ஈடுபடுத்தப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் தழுவினர். இதனிடையே மாடு முட்டியதில் திருமயம் அருகே உள்ள கண்ணணூர் புதுவயல் கிராமத்தைச் சேர்ந்த சிவா (25) என்ற இளைஞர் உயிரிழந்தார்.
இவரது உடலை பொன்னமராவதி காவல் துறையினர், கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முதல்கட்ட தகவலில், இவர் இன்றிரவு சிங்கப்பூர் செல்ல இருந்த நிலையில், உயிரிழந்தது தெரியவந்துள்ளது. அதோடு, இவர் சிங்கப்பூர் செல்ல இருந்ததால் அவரது நண்பர்கள் அவரை வீட்டிலேயேவிட்டு விட்டு மஞ்சுவிரட்டு பார்க்க சென்றுள்ளனர்.
ஆனால், சிங்கப்பூருக்குச் சென்றால் மீண்டும் நாடு திரும்பும் வரை மஞ்சுவிரட்டு போட்டியை பார்க்க முடியாது என்ற ஆசையில் சிவா தனியாக அங்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில் மாடுமுட்டி படுகாமடைந்துள்ளார். அங்கு மருத்துவக் குழு இல்லாததால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். அதன்பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிர்பிரிந்துள்ளது. இவரின் உடலை கண்ட அவரது நண்பர்கள் கதறி அழுதது, அங்கிருந்த மக்களையும் கண்கலங்க செய்தது.
இதையும் படிங்க: திண்டுக்கல்லில் ஜல்லிக்கட்டு போட்டி - சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 21 பேர் காயம்