புதுக்கோட்டை: தன்னை வாழவிடாமல் விரட்டி வருவதாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட எழுத்தாளர் ஒருவர் குடும்பத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் கண்ணன்(55). இதுவரையிலும் நான்கு புத்தகங்களை வெளியிட்டுள்ளார். அதில் 2012ஆம் ஆண்டு இவர் வெளியிட்ட "கானா இனாவின் கணினி" என்ற நூல், "கனவு மெய்ப்பட வேண்டும் என்ற குறும்படம்" போன்றவைகளின் மூலம் அப்பகுதியில் உள்ள பிரச்னைகளை எடுத்துக் காட்டியுள்ளார்.
இது அப்பகுதியில் வசிக்கும் சிலருக்கு பிடிக்காமல் அவரது வீட்டை எரித்தனர். அதுமுதல் அவர் அப்பகுதியில் இருந்து சென்று வேறொரு பகுதியில் வசித்து வந்தார். அப்போது முதல் அவர் அளித்த புகார் மனுக்கள் எதையும் இதுவரையிலும் அரசு அலுவலர்கள் கண்டுகொள்ளவில்லை என இன்று(அக்.1) உண்ணாவிரதப் போராட்டத்தில் தனது குடும்பத்தாருடன் ஈடுபட்டார்.
அப்போது அவர் கூறுகையில், ”இந்த சமுதாயத்தில் குற்றம் செய்பவர்களை விட்டுவிட்டு நியாயம் கேட்பவர்களை தண்டிக்கிறது இந்த சட்டமும், காவல் துறையும். ஒரு எழுத்தாளராகிய எனக்கு இந்த சுதந்திர நாட்டில் வாழ்வதற்கு பாதுகாப்பும், இடமும் இல்லாமல் ஆக்கிவிட்டனர் சிலர். இதே ஊரில் எனக்கு வீடும், நிலம் போன்றவை இருந்தும் என்னால் வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எட்டு வருடங்களாக எனக்கு நேர்ந்த அநீதியை கேட்டு தொடர்ந்து புகார் மனுக்களை அளித்துவந்தேன்.
எந்த ஒரு அரசு அலுவலரும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனது குடும்பம் இதனால் ஆங்காங்கே சிதறி வாழ்கிறது. எங்களுக்கு சொந்தமான குளத்தில் தனி நபர் விவசாயம் செய்து ஆக்கிரமித்துக்கொண்டார். அந்தக் குளம் அரசாங்கத்திற்குறியது என்றால் அதனை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் அல்லவா!? எப்படி ஒரு தனிநபர் ஆக்கிரமித்துக் கொள்ள முடியும்? ஏற்கனவே கொளுத்தப்பட்ட எனது வீட்டை மீண்டும் புதுப்பித்து கட்ட விடாமல் தொடர்ந்து மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது.
இதுவரையிலும் நூறு முறையாவது புகார் செய்திருப்பேன். காவல் துறை, வருவாய்த்துறை, நில அளவை அலுவலர்கள் என யாருமே கண்டுகொள்ளவில்லை. தொடர் உண்ணாவிரத போராட்டம் என்று நான் அறிவித்தவுடன் என்னை கைது செய்வதற்காக காவல் துறையினர் வந்துவிட்டனர். குற்றம் செய்பவர்களை தட்டிக் கேட்காமல் நியாயம் கேட்கும் என்னையும், வயதானவர்கள் என்று கூட பாராமல் என் தாயையும், இரு தங்கைகள் என என் குடும்பத்தாருடன் கைது செய்துள்ளனர்.
எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும், எனது நிலத்தை மீட்டுத்தர வேண்டும். எனது ஊரில் நான் சுதந்திரமாக வாழ்வதற்கு பாதுகாப்பு வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட குளத்தை திருப்பி தர வேண்டும்” என்றார்..
இதுகுறித்து அலுவலர்களிடம் கேட்டபோது, அவரது கோரிக்கையை பரிசீலனை செய்து கொண்டுதான் இருக்கிறோம். அதற்கு என்ன செய்ய முடியுமெ என காவல் அலுவலர்கள், விஏஓ தாசில்தார், பிடிஓ, ஆர்ஐ என அனைவரும் அலட்சியமாக பதில் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: ஒருவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற பாடுபடும் கிராமம்!