புதுக்கோட்டை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் மாவட்டங்களுக்கான மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் இன்று (ஜன.3) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலர் ஜவஹர் கலந்துகொண்டு பல்வேறு துறை அதிகாரிகளிடம் ஆய்வு மேற்கொண்டார். இதில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஜவஹர், இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மனித கழிவுகளை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கொட்டியவர்களை இதுனால் வரை கண்டறியப்படவில்லை. இந்த செயலில் ஈடுபட்ட குற்றவாளியை கண்டுபிடிக்க நீர் தேக்க தொட்டியில் இருந்து எடுக்கப்பட்ட கழிவை சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
அந்த ஆய்வில் நீர் தேக்க தொட்டியில் கொட்டப்பட்டது மனித கழிவா அல்லது விலங்குகளின் கழிவா என்பது தெரியவரும். இந்த செயலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க ஏடிஎஸ்பி தலைமையில் 11 பேர் கொண்ட குழுவினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த செயலை செய்த குற்றவாளிக்கு தகுந்த ஆதாரங்களை சேகரித்த பிறகுதான் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் ஒரு புறம் வளர்ச்சி திட்ட பணிகள் நலத்திட்டங்களில் கவனம் செலுத்தி வந்தாலும் மற்றொருபுறம் குற்ற சம்பவங்கள் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஒரு குற்ற சம்பவம் நடந்தவுடன் உடனடியாக வழக்கு பதிவு செய்யப்படுகிறது. மற்ற மாநிலங்களில் இது போன்று செயல்படுவது கிடையாது. அதனால்தான் வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு தமிழ்நாட்டில் அதிக அளவு குற்றம் சம்பவம் நடைபெறுவதாக தெரிகிறது.
அதேபோல் வன்கொடுமை குற்றங்களில் வழக்கு பதிவு செய்யும் பொழுது அது முழுமையாக விசாரணை செய்து குற்றம் உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு தண்டனை பெற்று தரும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வழக்குப்பதிவு செய்வது மட்டும் தீர்வு இல்லாமல் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு தண்டனை வாங்கித் தரும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறோம். எங்கே எங்கே எல்லாம் வன்கொடுமை தொடர்பாக புகார்கள் வருகிறதோ, உடனடியாக அந்த புகார்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
பழங்குடியினர், பட்டியலினத்தவர் எனக் கூறி, போலி சாதிச் சான்றிதழ்கள் பெறுவதை தடுப்பது குறித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இதை கண்டறிய மாநில ஆய்வுக் குழு உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள வழக்குடன் சேர்த்து 3,070 வழக்குகள் நிலுவையில் இருந்தது. படிப்பிற்கோ வேலைக்கோ போலிச் சான்றிதழ் கொடுத்து சேர்ந்திருக்கிறார் என்று புகார் வந்ததன் அடிப்படையில் கடந்த எட்டு மாதங்களில் 800 வழக்குகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வருகின்ற மார்ச் 31ஆம் தேதிக்குள் மீதமுள்ள வழக்குகளும் கட்டாயம் முடிக்கப்படும். இதை நீதிமன்றத்திடம் ஆதாரப்பூர்வமாகவும் எது மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் தெரிவிக்க உள்ளோம்.
தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்பி, வருவாய் துறையினர் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே எங்கும் இல்லாத வகையில் தென்காசியில் பள்ளி மாணவரிடம் வன்கொடுமை காட்டியவரை ஊரை விட்டு நான்கு மாதம் ஒதுக்கி வைத்து நடவடிக்கை எடுத்தோம். இது போல் எங்கும் நடவடிக்கை எடுத்ததில்லை நாம் எடுத்தோம்.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை சரியாக அமல்படுத்தினால் தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும். தமிழகத்தில் 20% ஆதிதிராவிட மக்களும் ஒரு சதவீதம் பழங்குடி மக்களும் உள்ளனர். இவர்கள் ஏழை எளிய மக்கள் இவர்களை பாதுகாக்க தான் இந்த சட்டம் உள்ளது. பாதிக்கப்படுபவர்களை பாதுகாப்பது நமது கடமை. அதே நேரத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தவறுதலாக பயன்படுத்தவும் வாய்ப்பு உள்ளது.
அதற்காகத்தான் மாவட்ட அளவிலான விஜிலென்ஸ் கமிட்டி உள்ளது. தற்போது முதல் தகவல் அறிக்கை பதியும்போதே விசாரித்து வழக்குப்பதிய அறிவுறுத்தியுள்ளோம். இனி வரக்கூடிய காலங்களில் தமிழகம் முழுவதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் தவறுதலாக வழக்கு பதிவதற்கு வாய்ப்புகள் இருக்காது.
இறையூர் பகுதியில் இரட்டை குவலை புகார்கள் வந்ததால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. வரும் காலத்தில் தமிழகம் முழுவதும் இதுபோன்ற இரட்டைக்கோலைமுறை கோயிலில் வழிபாடு மறுப்பது உள்ளிட்ட எந்த புகார் வந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
பாதிக்கப்பட்ட மக்கள் தன்னால் செயல்பட முடியாமல் இருக்கக்கூடிய சூழலுக்காக தான் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் யாராக இருந்தாலும் அவர்கள் புகார் கொடுக்கிறார்களோ இல்லையோ அவர்களை காக்கக்கூடியது அரசின் கடமை. ஒரு குற்றம் நடந்தது தெரிய வந்தால் யாரும் புகார் கொடுக்கத் தேவையில்லை குற்றம் உறுதி செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கலாம்.
இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தீண்டாமையோ கோயில் வழிபாடு மறுப்போ அரங்கேறுவதில்லை. தனியார் கோயில்களில் புகார்கள் வந்தால் உடனடியாக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் அந்த கோயிலுக்கு சென்று உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள்.
இறையூர் பிரச்சனைக்கு பிறகு சாதி ரீதியாக வன்கொடுமை சம்பந்தமான புகார்களை தெரிவிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட வாட்ஸ்அப் எண்ணில் இதுவரை 25 புகார்கள் பெறப்பட்டுள்ளன. வன்கொடுமை தடுக்க பல்வேறு விழிப்புணர்வுகள் எடுக்கப்பட்டு வருகிறது. வன்கொடுமை குற்றத்தை தடுக்க விழிப்புணர்வு என்பது மிகவும் அவசியம். அதனால் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
ஆதிதிராவிடர் நலத்துறையில் தற்பொழுது கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்றவாறு புதிய அலுவலகம் மற்றும் அதிகாரிகளும் எடுக்கப்பட்டு வருகின்றனர். அதனால் இனி வரக்கூடிய காலங்களில் இத்துறை சிறப்பாக செயல்படும்.
ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் மாணவர் விடுதி புதிய வடிவில் மேம்படுத்தப்பட உள்ளது. மேம்படுத்தப்பட்ட விடுதியை பார்க்கும் பொழுது மாணவர்களே முன்வந்து இந்த விடுதியில் தங்கி படிக்கலாம் என்று வரக்கூடிய அளவிற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தினுடைய அதிகாரிகள் முறையாக சட்டத்தை கடைப்பிடித்து செயல்படுத்தி வருகின்றனர். பள்ளி கல்லூரிகளில் மாணவர்கள் கயிறு கட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது அது முழுமையாக தடுக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் பகுதிகளில் உள்ள அடிப்படை தேவைகள் குறித்து இறுதி கட்ட கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இன்னும் பத்து தினங்களுக்குள் அப்பணி நிறைவடையும், அதற்கு தகுந்தார் போல் அவர்களின் அடிப்படை தேவைகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
2000 ஆண்டு பழமையான பிரச்சனையை இரண்டு ஆண்டுலையோ 20 ஆண்டுகளையோ மாற்றி விட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகத் தான் மாற்ற முடியும் என்றார்.
இதையும் படிங்க: "லஞ்ச ஒழிப்புத்துறை ஊழியர்கள் ஜீன்ஸ், டீசர்ட் அணியத் தடை" - பஞ்சாப் அரசு