புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கடந்த வாரம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் வீடுகள், உடைமைகள் எல்லாம் தாக்கப்பட்டது. இதனால் அந்தப்பகுதியில் 800க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டனர். தற்போது பொன்னமராவதியில் இயல்பு நிலை திரும்பி விட்டதால், வெளிமாவட்டங்களில் இருந்து வந்த காவலர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்த நந்தினி(21) என்ற பெண் காவலர், பணி முடிந்த நிலையில் விடுப்பு கேட்டுள்ளார். இதற்கு பணி பதிவு செய்யும் எழுத்தர் விடுப்பு கொடுக்க முடியாது என்றும், மறுபடியும் பணி ஒதுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த நந்தினி விஷம் குடிப்பேன் என பேசிய ஆடியோவை தனது நண்பர்களுக்கு அனுப்பி விட்டு பூச்சி மருந்தை குடித்துள்ளார். அவர் மயங்கியதை அறிந்து அருகில் இருந்த காவலர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பணிச்சுமையை குறைக்க விடுப்பு கொடுக்காததால் பெண் காவலர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் காவலர்களிடையே மட்டுமின்றி புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.