புதுக்கோட்டை: கீரனூர் அருகே தெற்குதுவரவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (31). இவர், நேற்று (டிச.11) வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அவரது உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டு இன்று (டிச.12) சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.
அப்போது திருநாவுக்கரசரின் உடலைப் பார்த்த அவரது மனைவி வினிதா (22) அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்ட அவரது உறவினர்கள் கீரனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அவரது உறவினர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
இதனிடையே வினிதாவின் உடல் உடற்கூராய்வு பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் அவர் அதிர்ச்சியில் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் விஷம் அருந்தி உயிரிழந்தாரா என்பது குறித்து உடற்கூராய்வு பரிசோதனைக்குப் பின்பே தெரியவரும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருநாவுக்கரசிற்கும் வினிதாவிற்கும் திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகி இரு குழந்தைகள் உள்ள நிலையில் நேற்று கணவன் தற்கொலை செய்துகொண்ட நிலையில் இன்று அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீரனூர் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கஞ்சா போதையில் நண்பனை கொலை செய்த நபர்; போலீசார் விசாரணை