புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அடுத்துள்ள குன்றாண்டார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர், அறிவழகன். இவருக்கும், இச்சடி அண்ணா நகரைச் சேர்ந்த சௌந்தர்யாவுக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, அறிவழகன் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில், அறிவழகனின் உறவினர்கள் சேர்ந்து அவருக்கு கைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சௌந்தர்யா என்ற மற்றொரு பெண்ணை கடந்த 8 மாதங்களுக்கு முன் இரண்டாவது திருமணம் செய்து வைத்துள்ளனர்.
பின்னர் இருவரும் கூட்டுக் குடும்பாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சௌந்தர்யாவுக்கும், அவரது மாமியாருக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அதே பகுதியில் இருவரும் தனியாக வீடு எடுத்து வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கிடையில் அறிவழகனின் நண்பரான பாலு என்ற நபருக்கும், சௌந்தர்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி அறிவழகனின் அண்ணன் ஆனந்துக்கு சௌந்தர்யா தொடர்பு கொண்டு, உங்கள் தம்பி மூச்சு பேச்சு இல்லாமல் கிடக்கிறார், சீக்கிரம் வாருங்கள் என்று அழைத்துள்ளார். பின்னர் வீட்டுக்கு வந்த ஆனந்த், தனது தம்பி இறந்த நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர், (நவ.10) உறவினர்கள் முன்னிலையில் அங்குள்ள மாயானத்தில் அவரின் உடல் புதைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அறிவழகன் சாவில் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள், நவம்பர் 12ஆம் தேதி சௌந்தர்யாவின் தொலைபேசியை பரிசோதித்து பார்த்துள்ளனர். அப்போது, “அறிவழகனை நான் தான் கொலை செய்தேன். என்னை காப்பாற்றுங்கள், இல்லையென்றால் வேறு ஏதாவது பிரச்னையாகிவிடும்” என்று தனது பெற்றோரை சௌந்தர்யா அழைத்துள்ளார். இது குறித்து குடும்பத்தினர் விசாரித்தபோது, பாலு என்பவர்தான் அறிவழகனை கொலை செய்ததாக கூறியுள்ளார்.
இது குறித்து அறிவழகனின் தாய் சாந்தி, நவ.13ஆம் தேதி உடையாளிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் கொளத்தூர் வருவாய்த் துறையினர் முன்னிலையில் அறிவழகனின் சடலம் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து கடந்த 14ஆம் தேதி தோண்டி எடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து, பிரேத பரிசோதனைக்குப் பின்னர், உடல் மீண்டும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதன் பின்னர் சம்பந்தப்பட்ட பாலு என்பவரை விசாரித்துவிட்டு, சௌந்தர்யாவை கைது செய்த உடையாளிப்பட்டி காவல் துறையினர், அவரை திருச்சி சிறையில் அடைத்தனர். அறிவழகனை கொலை செய்தது பாலுதான் என சௌந்தர்யா கூறினாலும், பாலுவை கைது செய்யாமல் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடந்த 14ம்தேதி நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை முடிவில் அறிவழகன் கொலை செய்யப்பட்டுதான் இறந்துள்ளார் எனக் கூறிய காவல்துறையினர், இன்று வரை பிரேத பரிசோதனை அறிக்கையை குடும்பத்தினரிடம் ஒப்படைக்காதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள குடும்பத்தினர். இதற்கு உரிய விசாரணை நடத்தி அறிவழகனின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: “மாட்டிறைச்சி சாப்பிடுவாயா?” - இஸ்லாமிய பள்ளி மாணவியை ஆசிரியர் துன்புறுத்தியதாக புகார்!