புதுக்கோட்டை: கோயில் நிலத்தை அபகரித்து வைத்துள்ள அதிமுக நிர்வாகியைக் கண்டித்து கோயில் பூசாரி செல்போன் கோபுரத்தின் மீதேறி போராட்டம் நடத்திய வேளையில், தானும் எதற்கும் சளைத்தவன் இல்லை என்றபடி அதிமுக நிர்வாகியும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள போவதாக மிரட்டியதால், அந்த இடமே பரபரப்பாகக் காட்சியளித்தது.
விராலிமலை அருகே பொத்தப்பட்டியில் கருப்பர் கோயில் உள்ளது. அக்கோயிலுக்குச் சொந்தமான காலி இடம் அப்பகுதியிலேயே உள்ளது. இந்த இடத்தின் அருகே வசித்துவரும் அதிமுக நிர்வாகி சுதாகர், அந்த கோயில் இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டு காலி செய்ய மறுப்பதாகக் கூறப்படுகிறது.
கோயில் நிலம்
இதனையடுத்து இன்று அந்தக் கோயில் பூசாரி ராசு என்பவர் ஆக்கிரமிப்பு இடத்தை காலி செய்து தரக்கோரி விராலிமலை- மதுரை நான்கு வழி சாலையில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்த விராலிமலை காவல் துறையினர், தீயணைப்பு, வருவாய் துறையினர் ராசுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து கீழே இறங்கினார்.
அதனைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பு இடத்திற்கு சென்ற காவல் துறையினர், வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்பாளரான அதிமுக நிர்வாகி சுதாகருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போதே, அது தனக்கு சொந்தமான இடம் என்றும், அந்த இடம் குறித்து தான் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாகவும் கூறினார்.
மிரட்டல்
தொடர்ந்து, இடத்தை காலி செய்து கொடுக்க மாட்டேன் என்று கூறியவாறு சுதாகர் மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொளுத்திக் கொள்வேன் என மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து காவல் துறையினர் அவரை சமாதானப்படுத்தி மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்போது, சுதாகரின் மனைவி மற்றும் அவரது மகள்கள் தரையில் அமர்ந்து கதறி அழுதனர். அதில் ஒரு மகள் மண்ணெண்ணெய் வைத்துக் கொளுத்திக் கொள்வேன் என்று கூறினார்.
சமாதான பேச்சுவார்த்தை
இதனையடுத்து அந்த இடம் ஒரே களேபரமாக மாறியது. அதனைத் தொடர்ந்து அரசு அலுவலர்கள் இரண்டு தரப்பையும் சமாதானப்படுத்தி விராலிமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாலை சமாதான பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காணலாம் என்று கூறி இரு தரப்பையும் மாலை வட்டாட்சியர் அலுவலகம் வருமாறு அறிவுறுத்தினர்.
அதுவரை இருதரப்பும் எந்தவித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடக் கூடாது என்று வலியுறுத்தி சென்றனர். இதனால் சுமார் 4 மணி நேரமாக அப்பகுதியில் நிலவிய பரபரப்பு முடிவுக்கு வந்தது.