புதுக்கோட்டை: ஆலங்குடி அருகே உள்ள வடகாடு சேர்வைகாரன் பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ். திருமணமாகாத இளைஞரான ரமேஷ் கடந்த வாரம் ஞாயிறு அன்று அதிகாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். கடந்த ஞாயிறு அன்று உடற்கூறாய்வு முடிந்து வந்த ரமேஷின் உடலை சாலையில் வைத்து புதுக்கோட்டை - சேதுபாவாசத்திரம் நெடுஞ்சாலையில் அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக குற்றவாளியைக் கண்டிபிடிப்பதாக வடகாடு போலீசார் உறுதி அளித்திருந்த நிலையில், ரமேஷின் உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சூழலில் இறந்து போன ரமேஷின் 8ம் நாள் சடங்கு இன்று நடைபெற்ற சூழலில் சடங்கிற்காக வடகாடு வந்த அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள், விபத்தை ஏற்படுத்திய வாகனத்தையும், குற்றவாளியையும் ஒரு வாரத்திற்கும் மேலாகியும் கண்டுபிடிக்காத காவல் துறையினரைக் கண்டித்து புதுக்கோட்டை - சேதுபாவாசத்திரம் நெடுஞ்சாலையில் மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக புதுக்கோட்டை - சேதுபாவாசத்திரம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. இதன் இடையே அவசரமாக கடந்து செல்ல வேண்டிய ஆம்புலன்சிற்கு வழிவிட்டு பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
வடகாடு, கொத்தமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் துக்க நிகழ்ச்சிகள் மற்றும் துக்க சடங்குகளில் பங்கேற்கும் ஆண்கள் மேலாடை அணியாமல் இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு நிகழ்வுகளுக்கு செல்லும் வழக்கமாக இருந்து வரும் சூழலில் எட்டாம் நாள் சடங்கிற்கு வந்த ரமேஷின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட ஆண்கள் மேலாடை அணியாமல் துண்டோடு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகள் உறவினர்களிடம் நடத்திய பேச்சு வார்த்தையில் இன்னும் ஒரு வாரத்தில் குற்றவாளியை கண்டுபிடிப்பது, நிவாரணம் பெற்று தருவது என பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சாலை மறியலை உறவினர்கள் கைவிட்டனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: 370 கிலோ எடை கொண்ட காரை தூக்கி சாதனைப் படைத்த 'குமரி ஸ்ட்ராங் மேன்’