புதுக்கோட்டை: திருமயம் அடுத்த ஊனையூர் உள்ளிட்ட 19 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தேசிய நெடுஞ்சாலையை அடைய திருமயம் பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதை பிரதான பாதையாக உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளது.
வாகன ஓட்டிகள், பொது மக்கள் சுரங்க பாதையை பயன்படுத்த முடியாமல் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றிவர வேண்டி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சுரங்கப்பாதையில் உள்ள மழைநீரை அகற்றக் கோரி அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
சுரங்க பாலத்தை பயன்படுத்த முடியாததால் வீண் நேர விரயம் உள்ளிட்ட பிரச்சினைகளை சந்திப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். இதையடுத்து திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் திரண்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சாலை மறியலால் திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேருந்துகள், லாரிகள், கார்கள் சாலையில் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்து வந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து பொன்னமராவதி டி.எஸ்.பி, புதுக்கோட்டை ஆர்.டி.ஓ. சரவணன், திருமயம் வட்டாட்சியர் பிரவீனா மேரி, வட்டார வளர்ச்சி அலுவலர் சதாசிவம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்திய பின் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். சுரங்கப்பாதையை ஆய்வு செய்த ஆர்.டி.ஒ உரிய நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னை விமானநிலையத்தில் 10 கிலோ தங்கம் பறிமுதல்; 15 பேர் கைது