புதுக்கோட்டை: தமிழ்நாடு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தொடுத்த வழக்கில், வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தற்போதைய விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் கடந்த 2016 - 2021 வரையான ஆறு ஆண்டுகளில் 35.79 கோடி ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சி.விஜயபாஸ்கர், அவர் மனைவி ரம்யா மற்றும் அவரது உறவினர்கள் சம்பந்தப்பட்டதாக கூறப்பட்ட அலுவலகங்கள், இலுப்பூரில் உள்ள அவரது வீடு மற்றும் திருவேங்கைவாசலில் உள்ள அவரது கல் குவாரி ஆகிய 50க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 2021 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான போட்டித் தேர்வு; சிறப்புப் பயிற்சி வகுப்புகள் தொடக்கம்!
இரண்டு நாள்களாக நடைபெற்ற இந்த சோதனையில் 23 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணம், 4.87 கிலோ தங்கம், 3.76 கிலோ வெள்ளி, 135 கனரக வாகனங்களின் பதிவு சான்றுகள், 19 ஹார்ட் டிஸ்க்கள், புல்லட் ஆவணங்கள் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் 2021ஆம் ஆண்டு அக்.17 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தது. வழக்குப்பதிவு செய்து 19 மாதங்கள் ஆகிய நிலையில், கடந்த மே மாதம் 22ஆம் தேதி புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் நடைபெற்றது. இதில், புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி இமயவரம்பன் மற்றும் காவல் ஆய்வாளர் ஜவகர் ஆகியோர் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் விஜயபாஸ்கர் மற்றும் அவர் மனைவி ரம்யா ஆகியோர் மீது 35 கோடியே 79 லட்சத்து 90 ஆயிரத்து 81 ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 216 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த வழக்கில் வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா இருவருக்கும், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.