மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன், புதுக்கோட்டையில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாய சங்கங்கள், தொழிற்சங்கங்கள் சார்பில் வரும் 26ஆம் தேதி நடக்கும் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கலந்துகொள்ளும்.
தான் ஒரு விவசாயி என்று கூறிக்கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளுக்கு எதிரான இந்தச் சட்டங்களை எதிர்க்காமல் வரவேற்றுள்ளது துரதிர்ஷ்டவசமானது.
மேலும் பாஜக சார்பில் நடத்தப்படும் வேல் ரத யாத்திரை என்பது மத நம்பிக்கைக்காக அல்ல அரசியல் செய்வதற்காகத்தான். தமிழ்நாடு அரசு இந்த யாத்திரைக்குத் தடைவிதித்து இருப்பதாகத் தெரிவித்தாலும் தொடர்ந்து யாத்திரை என்பது நடந்து கொண்டுவருவது இரண்டு கட்சிகளும் சேர்ந்து நடத்தும் நாடகம்.
விவசாயிகளின் நீண்ட நாள் கனவான காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்தும்போது, நிலம் கையகப்படுத்தும்போது விவசாயிகள் மட்டுமல்லாது பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீட்டை அரசு அளிக்க வேண்டும்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி தோல்வியடைந்து இருப்பது குறித்து ஆராயப்பட வேண்டியது முக்கியம். இருப்பினும் பணபலம், அதிகார பலத்தினால்தான் பாஜக கூட்டணி வெற்றிபெற்றுள்ளது. திருமாவளவன் கூறியுள்ளதை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் அவர்களது உரிமை. ஆனால் அதற்காக அவர் மீது வழக்குப் போடுவது என்பது தவறு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்த மதத்திற்கு எதிரானது அல்ல.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாத காலம் உள்ளது. ஆகையால் கூட்டணி குறித்தும் புதிய கட்சிகள் திமுக கூட்டணி சேர்வது குறித்தும் தற்போதைக்கு எந்தப் பதிலும் கூற முடியாது” எனத் தெரிவித்தார்.